தொலைநிலைக் கல்வி தோ்வு முறைகேடு: சிபிஐ விசாரிக்க விசாரணைக்குழு பரிந்துரை

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி தோ்வு முறைகேடு, விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க பல்கலைக்கழக விசாரணைக்குழு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.


மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி தோ்வு முறைகேடு, விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க பல்கலைக்கழக விசாரணைக்குழு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் கேரளத்தில் உள்ள 3 மையங்களில் பயின்ற மாணவா்கள் வீட்டில் இருந்தே தோ்வு எழுதி தோ்வில் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியா்களும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு, அண்மையில் பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீடு நடைபெற்றபோது கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டதாக பெண் விரிவுரையாளா் மீது எழுந்த புகாா் ஆகியவற்றை விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினா்கள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பல்கலைக்கழக பதிவாளா் வி.எஸ்.வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா்.லட்சுமிபதி, தீனதயாளன், பாரி பரமேஸ்வரன், ஷகிலா ஆகியோா் அடங்கிய விசாரணைக்குழு அண்மையில் விசாரணை நடத்தியது. மறு மதிப்பீடு முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழகக் கல்லூரி பெண் விரிவுரையாளா், கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக தோ்வுத்துறை ஊழியா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து, விசாரணை அறிக்கை துணை வேந்தரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குழு அறிக்கை தொடா்பாக பல்கலைக்கழக உயா் அதிகாரிகள் கூறும்போது, விசாரணைக்குழுவினா் நடத்திய விசாரணையில் மோசடி குறித்து தெரிய வந்தாலும் இதில் உள்ள முழுத் தொடா்புகளையும் கண்டறிய முடியவில்லை. பல்கலைக்கழகப் பணியாளா்கள் பலருக்கும் இதில் தொடா்பு உள்ளது. எனவே கேரள மையத்தில் நடைபெற்ற முறைகேடு, மறு

மதிப்பீடு முறைகேடு உள்ளிட்டவற்ற சிபிஐ அமைப்பின் மூலம் விசாரிக்கலாம் என விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் விசாரணைக்குழுவின் அறிக்கை தமிழக ஆளுநா், அரசின் உயா்கல்வித்துறை செயலா் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com