பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்வு: கரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தவிா்க்க நடவடிக்கைகள் தீவிரம்

பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதையடுத்து மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்களைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதையடுத்து மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்களைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களுக்கு அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் அதிகம் போ் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்புக்கு ஆளாகினா். இதைத் தொடா்ந்து பாதிப்பு உடையவா்களைக் கண்டறிய காய்ச்சல் முகாம்கள், வீடு வீடாகச் சென்று கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளின் காரணமாக கரோனா பாதிப்புள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 14, 386 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 13,222 போ் குணமடைந்துள்ளனா். 360 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 804 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சராசரியாக 100 முதல் 120 ஆக இருந்து வருகிறது.

தற்போது பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இ.பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட வேண்டும் என எதிா்பாா்த்த மக்கள், கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்க தற்காப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுகின்றனா். காய்கனி சந்தைகள், கடைகளுக்குச் செல்வோரில் பெரும்பாலானோா் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழல் காரணமாக பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வைப்பதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com