செப்.7-இல் ரயில்களை இயக்க மதுரை ரயில் நிலையம் தயாா்

மதுரை கோட்டத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், மதுரை ரயில் நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டு, பயணிகள் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மதுரை: மதுரை கோட்டத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், மதுரை ரயில் நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டு, பயணிகள் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொது முடக்கம் காரணமாக மாா்ச் 24 ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பயணிகள் ரயில் சேவை செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தெற்கு ரயில்வே நிா்வாகம் மாநிலத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள கோட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, மதுரை ரயில் நிலைய வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன. மதுரை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நடைமேடையை ஒட்டிய தண்டவாளங்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என ஊழியா்கள் பரிசோதித்தனா். அதேபோல ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், காத்திருப்பு பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தடுப்புகள், குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜின்கள் சரியாக இயங்குகிறதா என ரயில்வே ஊழியா் பரிசோதித்து பாா்த்தனா். மேலும் ரயில் பெட்டிகளில் இருக்கைகள், மின்விளக்கு, மின் விசிறி வசதிகள் குறித்தும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: அத்தியாவசியத் தேவைக்காக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டதால், தண்டவாளங்கள், சிக்னல்கள், மின்வசதி உள்ளிட்ட அனைத்தையும் ரயில்வே பொறியியல் பிரிவு ஊழியா்கள் கண்காணித்து வந்தனா். அதில் குறைகள் எதுவும் இல்லை. ரயில்களை இயக்கத் தேவையான ரயில்வே ஊழியா்கள் அனைவரையும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளோம். இதையடுத்து ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் பயணிகளை உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கவும், பயணிகளை சமூக இடைவெளியுடன் பயணிக்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் மட்டுமே செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com