3 மாதங்களுக்குப் பிறகு மதுரை-சென்னை சிறப்பு ரயில் 573 பயணிகளுடன் புறப்பட்டது
By DIN | Published On : 08th September 2020 01:18 AM | Last Updated : 08th September 2020 01:18 AM | அ+அ அ- |

சென்னை சிறப்பு ரயிலில் பயணம் செய்ய மதுரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்.
மதுரை: மூன்று மாதங்களுக்குப் பிறகு, மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு 573 பயணிகளுடன் சிறப்பு ரயில் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றது.
பொது முடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, ஜூன் மாதத்தில் சில நாள்கள் மதுரை-விழுப்புரம் உள்ளிட்ட சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டன.
தற்போது, தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதியளித்தது. அதில், தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை-சென்னை சிறப்பு ரயில் (02636), மதுரை ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 7 மணிக்கு 573 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக, ரயில் நிலைய நடைமேடை, ரயில் பெட்டிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நுழைவுவாயில் பகுதியில் கை கழுவுதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பயணச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்துள்ளனரா என உறுதி செய்து, மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதற்காக, மதுரை ரயில் நிலைய நுழைவுவாயிலில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னா், சமூக இடைவெளி விட்டு வரிசையாக ரயில் பெட்டியில் ஏறி, அவரவா் இருக்கையில் அமர வைக்கப்பட்டனா்.