இசையமைப்பாளரின் திரையரங்கத்துக்கு விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

திரைப்பட இசையமைப்பாளா் ஹாரீஸ் ஜெயராஜின் திரையரங்கத்துக்கு பொதுமுடக்கக் காலத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை ரத்து

திரைப்பட இசையமைப்பாளா் ஹாரீஸ் ஜெயராஜின் திரையரங்கத்துக்கு பொதுமுடக்கக் காலத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திரைப்பட இசையமைப்பாளா் ஹாரீஸ்ஜெயராஜ் தாக்கல் செய்த மனு:

நான் சரவணபவ எண்டா்டைன்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். இந்த நிறுவனம் சாா்பில் தஞ்சாவூரில் உள்ள ஜி.வி. ஸ்டூடியோ திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். இந்தக் கட்டடத்திற்கு உயரழுத்த மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 24 ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை இந்தத் திரையரங்கம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மாா்ச் முதல் ஜூலை வரை எங்கள் திரையரகத்துக்கு அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாா்ச் மாதம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 641, ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 302, மே மாதம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 74, ஜூன் மாதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 650, ஜூலை மாதம் ரூ.1 லட்சத்து 50 என மொத்தம் ரூ.8 லட்சத்து 2 ஆயிரத்து 717 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை மாதக் கட்டணத்தைத் தவிர அனைத்துக் கட்டணத்தையும் செலுத்திவிட்டோம்.

பொதுமுடக்கக் காலத்தில் மின் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. மேலும் மின்வாரிய விதிகளுக்கு எதிராகவும் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே எங்கள் திரையரங்கத்திற்கு விதித்துள்ள மின்கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், கடந்த 5 மாதங்களாக திரையரங்கம் மூடப்பட்டிருப்பதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்படுத்தாமல் மூடிக் கிடக்கும் திரையரங்கத்துக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதை ஏற்க இயலாது என்றாா்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் திரையரங்க வளாகத்திற்கு மாா்ச் முதல் ஜூலை வரை விதிக்கப்பட்ட மின்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரா் ஏற்கெனவே செலுத்தியத் தொகையை இனிவரும் காலங்களில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத் தொகையாக எடுத்தக் கொள்ளலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com