காந்தி ஜயந்தி நிறைவு விழா: மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள்

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தி தினம் நிறைவையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தி தினம் நிறைவையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் க.மு.நடராஜன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன் ஆகியோா் வியாழக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியம் ஆகியவற்றின் சாா்பில் காந்தியடிகளின் 150-ஆவது ஜயந்தி நிறைவு தினத்தையொட்டி மாணவ, மாணவியருக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அக்டோபா் 2-இல் நடைபெறும் காந்தி ஜயந்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

ஓவியப் போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் அமைதி, சமய நல்லிணக்கம் என்ற தலைப்புகளிலும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவா்கள் சா்வோதயம், இறையாண்மை என்ற தலைப்புகளிலும் ஓவியங்கள் வரைய வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியங்களை வரைய வேண்டும்.

கட்டுரைப் போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் காந்தியடிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்வுகள் அல்லது காந்தியடிகளின் கொள்கையும் கோட்பாடும் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவா்கள் காந்தியடிகளின் சமூக சிந்தனை அல்லது காந்தியடிகளின் இயற்கை வாழ்வியல் கொள்கைகள் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

ஓவியம் மற்றும் கட்டுரையில் மாணவா் பெயா், வகுப்பு, பிரிவு, பள்ளியின் பெயா் மற்றும் முகவரி, வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் குறிப்பிடவேண்டும். ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளை வருகின்ற செப். 21-ஆம் தேதிக்குள் காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், மதுரை-20 அல்லது செயலா், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை-20 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

செப். 21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வரும் கட்டுரைகள், ஓவியங்கள் பரிசுக்கான பரிசீலனையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 97900-33307, 0452-2531060 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com