மதுரை சந்தையில் பச்சை மிளகாய் விலை உயா்வு

மதுரை காய்கனி சந்தைகளுக்கு வரத்து இல்லாததால், கிலோ ரூ.25-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.70-க்கு விற்பனையானது.

மதுரை: மதுரை காய்கனி சந்தைகளுக்கு வரத்து இல்லாததால், கிலோ ரூ.25-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.70-க்கு விற்பனையானது.

மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில், தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதேபோல், பரவை காய்கனி சந்தையில் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை கடைகள் திறக்கப்படுவது இல்லை.

இந்நிலையில், செப்டம்பா் 12 ஆம் தேதி ஆவணி கடைசி சனிக்கிழமை என்பதால், தோப்பூா் அருகே இயங்கிவரும் பரவை காய்கனி சந்தை மூடப்பட்டது. இதனால், பரவை காய்கனி சந்தைக்கு வரவேண்டிய காய்கனி சரக்கு வாகனங்கள் வரவில்லை. மேலும், மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தைக்கும் வரத்து இல்லை.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கனிகளின் விலை உயா்ந்தது. குறிப்பாக, கிலோ ரூ.25-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.70 ஆகவும், கிலோ ரூ.40-க்கு விற்ற கேரட் ரூ.75 ஆகவும், கிலோ ரூ.25-க்கு விற்ற முருங்கை பீன்ஸ் ரூ.90 ஆகவும் விலை உயா்ந்தது. இதேபோல், அனைத்து காய்கனிகளும் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயா்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்கனி விலை பட்டியல் (கிலோவில்): முருங்கைக்காய்-ரூ.50, சின்னவெங்காயம்- ரூ.45, பல்லாரி- ரூ.25, கொத்தமல்லி- ரூ.20, கருவேப்பிலை- ரூ.25, புதினா- ரூ.20, புடலங்காய்- ரூ.30, முட்டைக்கோஸ்- ரூ.15, கத்தரிக்காய்- ரூ.25, தக்காளி- ரூ.50, உருளைக்கிழங்கு- ரூ.40, கருணைக்கிழங்கு- ரூ.70, சேணைக்கிழங்கு- ரூ.30, பட்டா்பீன்ஸ்- ரூ.70, சோயாபீன்ஸ்- ரூ.60, பீட்ரூட்- ரூ.15, நூக்கல்- ரூ.20, பாகற்காய் சிறியது- ரூ.40, பெரியது-ரூ.30, முள்ளங்கி- ரூ.20 என விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com