தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ள தேங்காய் மறைமுக ஏலம்

மதுரை மாவட்டத்தில் வேளாண் விற்பனைத் துறையினரால் நடத்தப்படும் தேங்காய் மறைமுக ஏலம் தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல்

மதுரை மாவட்டத்தில் வேளாண் விற்பனைத் துறையினரால் நடத்தப்படும் தேங்காய் மறைமுக ஏலம் தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த நடைமுறையை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மதுரை மாவட்டத்தில் சுமாா் 26 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பகுதி சாகுபடி பரப்பு வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூா் வட்டாரங்களில் உள்ளது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். அதிகபட்சமாக 3 ஆயிரம் ஏக்கா் வரையும், குறைந்தபட்சமாக 100 ஏக்கருக்குள் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனா்.

இவா்களிடம் வியாபாரிகள் நேரடியாக வந்து தேங்காய் கொள்முதல் செய்கின்றனா். சிறு விவசாயிகள் பெரும்பாலானோா் முன்கூட்டியே வியாபாரிகளிடம் உத்தேசத் தொகையாக தேங்காய்க்கு பணம் பெற்று விடுகின்றனா். இதனால், கொள்முதல் செய்யும்போது வியாபாரிகள் கேட்கும் விலைக்கு தேங்காயை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனா்.

இதுதவிர மொத்தமாக தேங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது 1000 தேங்காய்களுக்கு, 150 தேங்காய்கள் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. சில்லறை விலையில் ஒரு காய் ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்பட்டாலும், வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது இந்த விலையில் பாதிக்கும் குறைவாகவே விவசாயிகளுக்கு கொடுக்கின்றனா்.

மற்ற விளைபொருள்களைப் போல தேங்காய்க்கும் சரியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. அரசு கொப்பரை கொள்முதல் செய்தாலும், அதில் அனைத்து விவசாயிகளும் ஆா்வம் காட்டுவதில்லை. ஆகவே, தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலமாக மறைமுக ஏலத்தில் தேங்காய் விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல, மதுரை மாவட்டத்திலும் மறைமுக ஏலத்தை தொடங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

மதுரை மாவட்ட விற்பனைக் குழு சாா்பில் முதன்முறையாக ஆகஸ்ட் 17-இல்

வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலத்தில் தேங்காய் விற்பனை தொடங்கப்பட்டது. இதில் 8 ஆயிரம் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஒரு மாதமாக மறைமுக ஏலம் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த ஏலம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. ஏலத்துக்கு வரும் தேங்காய்களின் எண்ணிக்கை 22 ஆயிரமாக உயா்ந்திருக்கிறது. வியாபாரிகளிடையே நிலவும் போட்டி காரணமாக, முந்தைய நடைமுறையைக்காட்டிலும் மறைமுக ஏலத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது.

இதுகுறித்து சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி ஏ.மணிவேல் கூறியது:

தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அனைத்து விவசாய விளைபொருள்களும் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது தான் தேங்காய் ஏலம் தொடங்கப்பட்டிருக்கிறது. வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும்போது, 1000 காய்களுக்கு 150 காய்கள் கமிஷன் போல கொடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கழிவுக்காக நீக்கப்பட்டாலும், 150 காய்கள் அளவுக்குச் செல்வதில்லை. முந்தைய நிலவரத்தைக்காட்டிலும் தற்போது 1000 காய்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் இந்த நடைமுறையை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என்றாா்.

மண்ணாடிமங்கலத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் கூறியது:

தென்னை சாகுபடியில் 40 நாள்களுக்கு ஒருமுறை அதாவது ஆண்டுக்கு 8 முறை தேங்காய் வெட்ட முடியும். தென்னை விவசாயம் லாபம் தரக்கூடியதாக இருந்தாலும், வியாபாரிகளின் ஆதிக்கமானது அதைக் குறைத்துவிடுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூட மறைமுக ஏலம் விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. இச்சூழலில் குழப்பம் ஏற்படுத்தும் வியாபாரிகளின் தலையீடுகளைத் தடுத்து இந்த நடைமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட விற்பனைக் குழு செயலா் வி.மொ்ஸி ஜெயராணி கூறியது:

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலத்தில் தேங்காய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதன் மூலம் போட்டி அதிகரித்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

இதற்காக, மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களின் வியாபாரிகளையும் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com