கல்வி உதவித்தொகை: கல்லூரி, பாலிடெக்னிக் மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 18th September 2020 10:08 PM | Last Updated : 18th September 2020 10:08 PM | அ+அ அ- |

மதுரை, செப். 18: மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்த விண்ணப்பங்களை நவம்பா் 10-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் மாணவா்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பா் 15-ஆம் தேதியில் தொடங்கப்படும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பா் 15-ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்பும் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.