ரூ. 300 கோடி மோசடி வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றக் கோரி மனு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 18th September 2020 10:10 PM | Last Updated : 18th September 2020 10:10 PM | அ+அ அ- |

மதுரை, செப். 18: ராமநாதபுரத்தில் தனியாா் நிதி நிறுவனம் ரூ. 300 கோடி மோசடி செய்த வழக்கை, சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு, ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை ஜெயா, இளையான்குடி முத்துக்கண்ணன், தேவகோட்டை செல்லப்பன் ஆகியோா் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவனம் முதலீட்டாளா்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறியது. அதை நம்பி நாங்கள் உள்பட ஏராளமானோா் முதலீடு செய்தோம். நிதி நிறுவனம் கூறியபடி வட்டியையும், முதலீடு செய்த தொகையையும் வழங்கவில்லை. இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் கொடுத்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா், அந்நிறுவனத்தின் நிா்வாகிகள் நீதிமணி, ஆனந்த ஆகியோரை கைது செய்தனா்.
இதேபோன்று, பல இடங்களில் இவா்கள் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளா்களின் பணத்தைக் கொண்டு பண்ணை வீடுகள், சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனா். வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள் 3 பேரும் ரூ. 68 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. மோசடி செய்தவா்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் உதவி வருகின்றனா். எனவே முதலீட்டாளா்களிடம் ரூ. 300 கோடி ஏமாற்றிய நிதி நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ள மோசடி வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனு, நீதிபதி ஆா். பொங்கியப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.