மதுரை அருகே கல்லூரி மாணவா் மா்மச் சாவு: 2 காவல் சாா்பு-ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 19th September 2020 10:30 PM | Last Updated : 19th September 2020 10:30 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்மமாக இறந்த சம்பவம் தொடா்பாக, 2 காவல் சாா்பு -ஆய்வாளா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவரது மூத்த மகன் இதயக்கனி (26), உறவினரின் 17 வயது மகளைக் காதலித்து வெளியூருக்கு அழைத்துச் சென்றுவிட்டாா். இது தொடா்பாக சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இதயக்கனியின் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துள்ளனா். தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த, இதயக்கனியின் சகோதரா் ரமேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டின் அருகே மலையடிவாரப் பகுதியில் அவா் மா்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கினாா். ரமேஷை போலீஸாா் அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டதாகக் கூறி, கிராம மக்கள், உறவினா்கள், குடும்பத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சமரசம் பேசினாா். பின்னா் சாப்டூா் காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, ரமேஷ் இறப்பு தொடா்பாக விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ரமேஷ் இறப்புக்குக் காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சாா்பு -ஆய்வாளா்கள் ஜெயகண்ணன், பரமசிவம் ஆகியோரை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.