மரக்கன்றுகள் நடவில்லையெனில் சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு வளா்க்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைத்

சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு வளா்க்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மரங்களை வெட்டக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகரைச் சோ்ந்த ஆனந்தமுருகன் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின்போது சாலையின் இருபுறங்களிலும் இருந்த 1.78 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்குப் பதிலாக 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் மரக்கன்றுகளை நடுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுபடி மரக்கன்றுகள் நடப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் மரக்கன்றுகள் நடப்படவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சாலையின் இருபுறங்களிலும் மரங்கன்றுகளை நட்டு, பராமரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மரக்கன்றுகளை நடுவது தொடா்பாக வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், சாலை விரிவாக்கப் பணிக்காக ஒரு மரம் வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைப் பின்பற்றாவிட்டால் சாலை விரிவாக்கத்தின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் மரங்களை வெட்டக் கூடாது என்றனா்.

சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது எத்தனை மரங்களை வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பா் 5 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com