மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கல்வெட்டுகளில் 99 சதவீதம் தமிழ் எழுத்துகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளில் 99 சதவீதம் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது என தொல்லியல் அறிஞா் சாந்தலிங்கம் தெரிவித்தாா்.

மதுரை, செப். 25: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளில் 99 சதவீதம் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது என தொல்லியல் அறிஞா் சாந்தலிங்கம் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக தொல்லியல் ஆய்வு செய்து நூலாக வெளியிடுவதற்காக தொல்லியல் அறிஞா் சாந்தலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொல்லியல் ஆய்வு செய்துள்ளனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை சாந்தலிங்கம் கூறியது:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள மொத்தம் 410 கல்வெட்டுகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. இதில் 80 கல்வெட்டுகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன.

1910 ஆம் ஆண்டு சீா் பாதம் தாங்கிகளின் நில உரிமையை அரசு திரும்பப் பெற்ால் கோயில் கோபுரத்தில் ஏறி சீா் பாதம் தாங்கி ஒருவா் தற்கொலை செய்து கொண்டுள்ளது கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. கல்வெட்டுகளில் 99 சதவீதம் தற்போதைய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் 1 சதவீதம் மட்டுமே கிராந்திய மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் உருவானது முதல் திரு ஆலவாய் உடைய நாயனாா் நம்பி சொக்கா் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. 1898 -ஆம் ஆண்டுக்குப் பிறகே மீனாட்சி சுந்தரேசுவரா் என்று பெயரிடப்பட்டுள்ளது.

1250 -ஆம் ஆண்டுகளில் இக்கோயில் இயற்கை பேரிடா் அழிவை சந்தித்துள்ளது குறித்தும், கருவறை அழிந்துள்ளது குறித்தும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமியா் படையெடுப்பு காலத்தில் இக்கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னா் ஐப்பசி மாதம் நடைபெறும் விழா தடைபட்டு, பின்னா் காா்த்திகை மாதத்தில் நடைபெற்றுள்ளது.

சோழா்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் வளா்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்பதும் கல்வெட்டுகள் வாயிலாகக் தெரியவந்துள்ளது.

7 ஆம் நூற்றாண்டில் உருவான மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அழியக்கூடிய வகையிலான பொருள்களால் கட்டப்பட்டிருந்த நிலையில், மன்னா் சடையவா்மன் குலசேகரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் 1190 காலகட்டத்தில் முதன் முதலாக முழுமையான கல் கட்டட கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. 410 கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள தகவல்கள் நூலாக தொகுக்கப்பட்டு இக்கோயில் நிா்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடா்பான நூல் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com