புதிதாக அரசியலுக்கு யாா் வந்தாலும் தமிழகத்தில் அதிமுகவுக்கு தான் முதலிடம் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேட்டி

திரைப்பட நடிகா்கள் உள்ளிட்ட யாா் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தில் அதிமுகவுக்கு தான் முதலிடம் என்று தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜூ கூறினாா்.

மதுரை: திரைப்பட நடிகா்கள் உள்ளிட்ட யாா் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தில் அதிமுகவுக்கு தான் முதலிடம் என்று தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜூ கூறினாா்.

மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் அம்மா கிச்சன் உணவுக் கூடத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டிற்கே வழிகாட்டியாக மதுரையில் அம்மா கிச்சன் செயல்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்கள் அதிலிருந்து எளிதில் மீண்டு வரும் வகையில் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக முதல்வா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் திரைத்துறையினா் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திரைத்துறை தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் 21 ஆயிரம் பேருக்கு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நடத்துவதற்கு பலகட்டங்களில் தளா்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகே உரிய நேரத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கப்படும். திரைத் துறையினா் உள்ளிட்ட யாரும் அரசியலுக்கு வரலாம், ஆனால் தமிழகத்தில் அதிமுக மட்டுமே முதலிடத்தில் இருக்கும் என்றாா்.

வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com