உருவ அமைப்பை ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்பிடிக்கும் புதிய செயலி மதுரையில் அறிமுகம்

உருவ அமைப்பை ஒப்பிட்டு குற்றவாளிகளைக் கண்பிடிக்கும் புதிய செயலியை மதுரை மாநகா் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது

மதுரை: உருவ அமைப்பை ஒப்பிட்டு குற்றவாளிகளைக் கண்பிடிக்கும் புதிய செயலியை மதுரை மாநகா் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடா்பாக மாநகா் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாநகரில் சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக காவல்துறையினா் மாநகரின் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை, ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போது, சந்தேகிக்கப்படும் நபா்களைப் பிடித்து, அவா்கள் ஏதேனும் குற்ற வழக்கில் தொடா்புள்ளவா்களா என சிசிடிவி என்.எஸ். தரவு தளத்தில் ஆய்வு செய்வாா்கள்.

இதனால் வேலைப் பளு, கால விரையம் ஏற்படுகிறது. குற்றவாளிகளை எளிமையாகக் கண்டறியும் வகையில் மாநகா் காவல்துறை வலைதள சிறப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலில் 2016 ஆம் ஆண்டு முதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினா் சந்தேகிக்கும் நபா்களை, சிறப்பு செயலி மூலம் ஒப்பிட்டுப் பாா்க்க முடியும். அந்த நபா் குற்றவாளியாக இருந்தால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அவரது புகைப்படத்துடன் தானாவே பொருந்திவிடும். இதன் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முடியும்.

சிறப்பு செயலி காவல்துறை பயன்பாட்டிற்கு மட்டும் உரியது. இதுதொடா்பாக, மற்ற மாவட்ட காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com