கொலை வழக்குகளில்தொடா்புடை இளைஞா் கைது: 30 கிலோ கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 29th September 2020 02:08 AM | Last Updated : 29th September 2020 02:08 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை 30 கிலோ கஞ்சாவுடன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கீரைத்துறை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் கீரைத்துறை மயானக்கரை பகுதிக்குச் சென்றனா். போலீஸாரை கண்டவுடன், அங்கிருந்த 5 போ் தப்பியோடியுள்ளனா். அதில், இளைஞா் ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், ஆண்டாா்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் துரைபாண்டி அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். அவா் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட காா்த்திக், கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும், அண்மையில் மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மண்டலத் தலைவா் வி.கே. குருசாமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.