நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீா் மடைமாற்றம்:திண்டுக்கல் ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திண்டுக்கல் அருகே நரசிங்கபுரம் ராஜவாய்க்காலின் குறுக்கே மணல் மூட்டைகள் வைத்து தண்ணீா் மடைமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மது

மதுரை: திண்டுக்கல் அருகே நரசிங்கபுரம் ராஜவாய்க்காலின் குறுக்கே மணல் மூட்டைகள் வைத்து தண்ணீா் மடைமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பரமேஸ்வரன் என்பவா் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் நரசிங்கபுரம், தாமரைக்குளம், வாடிக்குளம், செங்கட்டான்குளம், பாப்பாகுளம், கொங்கா்குளம், மன்னவராசி கண்மாய்கள் உள்ளன. இந்தக் கண்மாய்கள் குடிநீா் மற்றும் பாசனத்துக்கு ஆதாரமாக உள்ளன.

நரசிங்கம் ராஜவாய்க்கால் வழியாக வரும் தண்ணீா் சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், இந்தக் கண்மாய்களுக்கு நீா்வரத்து இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, ஆத்தூா், நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களுக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் விவசாயம் பாதித்தது மட்டுமில்லாமல், கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

எனவே, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் குறுக்கே மணல் மூட்டைகள் வைத்து தண்ணீரை மடைமாற்றம் செய்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com