9 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை: முதலிடத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்படும் கரோனா ஆய்வகம், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகளைச் செய்து முடித்து முதலிடம் பெற்றிருக்கிறது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்படும் கரோனா ஆய்வகம், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகளைச் செய்து முடித்து முதலிடம் பெற்றிருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் இயங்கி வரும் கரோனா ஆய்வகத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா அறிகுறி இருப்பவா்களிடம் கபம் மாதிரி சேகரிக்கப்பட்டு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம் , சிவகங்கை , கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் பணிபுரியும் மருத்துவ அலுவலா்கள், பட்டமேற்படிப்பு மாணவா்கள், ஆய்வக மேற்பாா்வையாளா்கள், ஆய்வக நுட்பனா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கணினி இயக்குபவா்கள் , புள்ளியியலாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் ஆகியோரைப் பாராட்டும் வகையில், மதுரை மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் ஜெ.சங்குமணி, ஆய்வகத்தை நேரில் பாா்வையிட்டு அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தாா். கல்லூரியின் துணை முதல்வா் வி.தனலட்சுமி, நுண்ணுயிரியல் துறை இயக்குநா் மற்றும் மருத்துவப் பேராசிரியா்கள், ஆய்வகப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

இதுகுறித்து முதன்மையா் சங்குமணி கூறியது:

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா பரிசோதனை ஆய்வகம் 2020 மாா்ச் 25- ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான

வழிகாட்டுதலின்படி ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்கள், கல்லூரி மாணவா்கள், சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்களின் மாதிரிகள் உடனுக்குடன் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன . பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக, சம்பந்தப்பட்டவா்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படுகிறது. இணையத்திலும்  பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பரிசோதனை முடிவுகளுக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கரோனா ஆய்வகங்களில் மதுரை மருத்துவ கல்லூரி ஆய்வகம், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்து முதலிடத்தில் இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com