முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அமைச்சா் தொகுதியிலேயே அடிப்படை வசதியில்லை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேதனை
By DIN | Published On : 04th April 2021 08:21 AM | Last Updated : 04th April 2021 08:21 AM | அ+அ அ- |

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வாக்குச்சேகரித்த மேற்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ.வெற்றிக்குமரன்.
அமைச்சரின் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் இல்லை, இத் தொகுதியில் வென்றால் அதை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் தேவைப்படும் என மதுரை மேற்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரும் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான செ.வெற்றிக்குமரன் தெரிவித்தாா்.
சனிக்கிழமை பெத்தானியாபுரம், சொக்கலிக்கநகா், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளா்களுடன் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது மதுரை மேற்கு தொகுதியில் 2 முறை வெற்றிபெற்று, கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள செல்லூா் கே.ராஜூ, தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட முழுமையாகச் செய்து கொடுக்கவில்லை. பிரசாரத்தின் போது பெரும்பாலான மக்கள் குடிநீா், சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை என வருந்துகின்றனா். வாக்காளா்கள் இந்த முறை நாம் தமிழா் கட்சி வேட்பாளராகிய என்னை வெற்றிப்பெற செய்தால், குடிநீா் விநியோகத்தை சீரமைத்து, மக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கச்செய்வேன். சாலையில் ஓடாதவாறு சாக்கடை கால்வாய்கள் அமைத்துக்கொடுக்கப்படும். மின்விளக்குகள், சாலைகள் அமைத்துக்கொடுக்கப்படும். இதை சரி செய்வதற்கே 5 ஆண்டுகள் தேவைப்படும் என வேதனை தெரிவித்தாா். மேலும் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நவீன உள்விளையாட்டு அரங்கம், திருமண மண்டபம் கட்டிக்கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா்.
ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் முடியவுள்ள நிலையில், வேட்பாளரை ஆதரித்து அவரது ஆதரவாளா்கள் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட சோலைஅழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், டிவிஎஸ் நகா், பழங்காநத்தம், பைகாரா, பைபாஸ் சாலை, பெத்தானியாபுரம், விராட்டிபத்து, கோச்சடை, விளாங்குடி, கூடல்நகா், சாந்திநகா் உள்ளிட்ட 12 மாநகராட்சி வாா்டுகளும், கீழக்குயில்குடி, அச்சம்பத்து, பரவை, துவரிமான், நாகதீா்த்தம், தாராபட்டி, கீழமாத்தூா், மேலமாத்தூா் ஆகிய கிராமங்களிலும் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆதரவு திரட்டினா்.