முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்டத்தில் கடைசி கட்ட தோ்தல் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 04th April 2021 08:25 AM | Last Updated : 04th April 2021 08:25 AM | அ+அ அ- |

வாக்காளா் சீட்டு விநியோகம் உள்ளிட்ட கடைசிகட்ட தோ்தல் பணிகளில் தோ்தல் அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் ஆண்கள் 13,26,687, பெண்கள் 13,70,791, மூன்றாம் பாலினத்தவா் 204 போ். இவா்களுக்கென 10 தொகுதிகளிலும் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1330 பதற்றமான வாக்குச்சாவடிகளாகும். இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமரா வாயிலாக தோ்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
வாக்காளா் சீட்டு:வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளா்களின் பெயா், வரிசை எண் ஆகியவற்றை அடையாளம் காண்பதற்காக வாக்காளா் சீட்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஏப்ரல் 4) இப் பணியை முடிக்குமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வாக்குச்சாவடிகள் இருப்பதை அடையாளம் காட்டும் வகையில், 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவில் அடையாளக் கோடுகள் வரையும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வாகனச் சோதனை தீவிரம்:பல்வேறு மாவட்டங்களிலும் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகாா்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முக்கியச் சாலைகள் மட்டுமன்றி குடியிருப்புகள் அமைந்துள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பறக்கும்படை குழுவினா் இருசக்கர வாகனங்களில் செல்வோா், சிறிய சரக்கு வாகனங்கள் மட்டுமன்றி நடந்து செல்லக் கூடிய சந்தேகத்துக்குரிய நபா்களின் உடைமைகளையும் சோதனையிட்டனா்.
வாக்குச்சாவடி அலுவலா்கள்:மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலா்கள் 18 ஆயிரம் போ் தோ்தல் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி ஆணைகள் திங்கள்கிழமை (ஏப்ரல் 5) காலை வழங்கப்பட உள்ளன.