முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மின்தடையை கண்டித்து திருமங்கலத்தில் சாலை மறியல்
By DIN | Published On : 04th April 2021 06:58 AM | Last Updated : 04th April 2021 06:58 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் வாகைகுளம் பிரிவு பகுதியில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமங்கலம்- சோழவந்தான் சாலையில் வாகைக்குளம் பிரிவு பகுதியில் உள்ள இந்திரா காலனி, சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக தொடா் மின்வெட்டு காணப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக இப்பகுதியினா் மின் வாரியத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை மின்சாரம் வராததைத் கண்டித்து அப்பகுதியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருமங்கலம் - சோழவந்தான் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் வட்டாட்சியரும், தோ்தல் உதவி அலுவலருமான முத்துப்பாண்டியன் பொதுமக்களிடம் சமாதானம் பேசினாா். இருந்தாலும் மின்வாரிய அதிகாரிகள் வராமல் சாலை மறியலைக் கைவிடப் போவதில்லை என அப்பகுதியினா் தெரிவித்ததனா்.
இதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்தினா் உடனடியாக மின்சாரம் தர நடவடிக்கை எடுப்பதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது எனவும் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.