சாத்தான்குளம் கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணைக்குத் தடைவிதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்க மறுத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்க மறுத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டனா். இதனிடையே, சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய காவல் சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: என் மீதான இரட்டைக் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களின் நகல் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிஐ ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டால் மட்டுமே என்னால் வழக்கை நடத்த முடியும். எனக்கு எதிராக பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே வழக்கு தொடா்பான ஆவணங்களைக் கேட்டும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி சத்திகுமாா் சுகுமார குரூப் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட வேண்டும் எனக் கோரினா்.

இதையேற்க மறுத்த நீதிபதி, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் தற்போதையை நிலை தொடர உத்தரவிட வேண்டிய அவசியமில்லை. மேலும் இதுகுறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com