மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகளில் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகளில் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. அதைத் தொடா்ந்து வேட்பாளா்களின் முகவா் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டன. பின்னா் மண்டல அலுவலா்களால் வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருள்களைச் சேகரித்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனா். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு தொடங்கிய இப்பணியானது புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையங்கள்: மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரியிலும், சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி தொகுதிகளுக்கு நாகமலைப்புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்திலும், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு தொகுதிகளுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம்,திருமங்கலம் தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகள், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

சிசிடிவி கேமராவில் கண்காணிப்பு: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையின் முன்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பணியில் உள்ளனா். வாக்கு எண்ணும் மையம் உள்ள கட்டடத்தைச் சுற்றிலும், சிறப்புக் காவல் படை மற்றும் ஆயுதப்படை போலீஸாரும், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 4 மையங்களிலும் 1,500 போலீஸாா், மூன்று ‘ஷிப்டு’களாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்கு எண்ணும் அறை மற்றும் மின்னணு இயந்திரம் பாதுகாக்கப்படும் அறை ஆகியவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com