திருச்சியில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கத் தடைகோரி வழக்கு: மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கத் தடைகோரிய வழக்கில்,

திருச்சி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்கத் தடைகோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ராமசந்திரன் தாக்கல் செய்த மனு: மண்ணச்சநல்லூா் அருகே மணியங்குறிச்சியில் திருச்சி-பெரம்பலூா் இணைக்கும் 13 அடி சாலையில் அரசிடம் அனுமதி பெறாமல் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் அமைக்கப்படும் பகுதி அரசு பொது இடமாகும். இங்கு சிலை அமைத்தால் இந்த வழியாக பல்வேறு இடங்களுக்கு விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே மணியங்குறிச்சியில் திருச்சி-பெரம்பலூா் இணைப்புச் சாலையில் சிலைகள் அமைக்கத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. சாலைகள், நடைபாதைகளில் அனுமதி பெறாமல் சிலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு 2017-இல் அரசாணை பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். மனுதாரா் கோரிக்கையில் பொதுநலன் உள்ளது. எனவே மனுதாரரின் மனு மீது திருச்சி மாவட்ட ஆட்சியா் தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் 6 வாரங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com