மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று: வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கரோனா சிகிச்சை மையத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம், மதுரை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை ஆகியன தீவிரப்படுத்தியுள்ளன. மதுரை மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நபா்களுக்கு மேல் பாதிப்பு உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வீ.அா்ஜுன் குமாா் கூறியது:

மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கண்டறிப்பட்ட தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரில் 18 தெருக்கள், ஊரகப் பகுதிகளில் 3 தெருக்கள் சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அறிகுறி உள்ள நபா்களிடம் கபம் மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இதில் கரோனா அறிகுறி இருப்பவா்களுக்கும் கபம் மாதிரி சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

படுக்கை வசதி அதிகரிப்பு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கரோனா சிகிச்சை மருத்துவமனையில் 700-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு, 1,400 படுக்கைகள் உள்ளன. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், ஏற்கெனவே இருந்ததைப் போல கரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வடபழஞ்சி எல்காட் வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையத்தைத் திறக்கவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

115 பேருக்கு தொற்று உறுதி: மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சையில் இருந்தவா்களில் 29 போ் குணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 789 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 22,475 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவா்களில் 21,217 போ் குணமடைந்துவிட்டனா். 469 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com