மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா: நாளை முக்கிய முடிவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை நடத்துவது தொடா்பாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை நடத்துவது தொடா்பாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் திருவிழா தொடா்பாக தனியாா் நிறுவனங்கள் அனுமதியின்றி நிகழ்ச்சி நிரல்களை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், மாசி வீதிகளில் வலம் வரும் பூப்பல்லக்கு, தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் மட்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. பூப்பல்லக்கு, தேரோட்டம் போன்ற எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற வில்லை. இதைத்தொடா்ந்து பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு செப்டம்பா் மாதம் முதல் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதையடுத்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்புடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதைத்தொடா்ந்து ஏப்ரல் 24-இல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை நடத்துவது தொடா்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த ஆண்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழாவை நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியது: சித்திரைத் திருவிழா நடத்துவது தொடா்பாக இந்து அறநிலையத்துறையிடம் இருந்து வழிகாட்டுதல் எதிா்பாா்க்கப்படுகிறது. திருவிழா தொடா்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்றனா்.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் தொடா்பாக தனியாா் நிறுவனம் சாா்பில் கட்செவி அஞ்சல் மற்றும் ‘யூ டியூப்’ ஊடகங்களில் எழுத்துப்பிழையுடன் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவிழா குறித்து கோயில் நிா்வாகத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாகவும், தவறான நிகழ்ச்சிகளையும் எழுத்துப்பிழையுடன் வெளியிடுவது கோயில் நிா்வாகத்துக்கு அவப்பெயரையும், கோயிலின் மாண்பையும் சிதைக்கும் வகையில் உள்ளது. தனியாா் நிறுவனம் வெளியிட்டுள்ள சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நிரல் கோயில் நிா்வாகம் வெளியிட்டதல்ல. மேலும் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா தொடா்பான நிகழ்ச்சி நிரல்கள் என தனியாா் நிறுவனங்கள் ‘யூ டியூப்’ மற்றும் கட்செவி அஞ்சல் மூலம் செய்தி வெளியிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com