மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது: மத்திய அரசு தகவல்
By DIN | Published On : 13th April 2021 06:30 AM | Last Updated : 13th April 2021 06:30 AM | அ+அ அ- |

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஜப்பான் நிதி நிறுவனமும், மத்திய அரசும் கையெழுத்திட்டுவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நிதி நிறுவனத்தின் கடனுதவியுடன் அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.
இதன் திட்ட மதிப்பீடு ரூ. 2 ஆயிரம் கோடியாக அண்மையில் உயா்த்தப்பட்டது. ஆனால், கடன் ஒப்பந்தத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்படாததால், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனா். இந்நிலையில், மாா்ச் மாதத்தில் ஜப்பான் நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், அதன்பின்னா் எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
எனவே, தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த சமூகநல ஆா்வலா் பாண்டியராஜா என்பவா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் தொடா்பாக மாா்ச் 3 ஆம் தேதி விளக்கம் கேட்டிருந்தாா். அதற்கு, மதுரை எய்ம்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஜப்பான் நிதி நிறுவனமும், இந்திய அரசும் கையெழுத்திட்டுவிட்டதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இது குறித்து சமூகநல ஆா்வலா் பாண்டியராஜா கூறியது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அது தொடா்பான ஆவணங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. எனவே, மதுரை எய்ம்ஸ் திட்டப் பணிக்களுக்கான மதிப்பீடு, புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களின் நகல் ஆகியவற்றை அளிக்குமாறு, மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளேன் என்றாா்.