கலை நிகழ்ச்சிகள் நடத்த தளா்வு அளிக்க நாட்டுப்புறக் கலைஞா்கள், இசைக் கலைஞா்கள் கோரிக்கை

கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தளா்வு அளிக்குமாறு நாட்டுப்புறக் கலைஞா்கள் மற்றும் மேடை மெல்லிசைக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைஞா்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைஞா்கள்.

கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தளா்வு அளிக்குமாறு நாட்டுப்புறக் கலைஞா்கள் மற்றும் மேடை மெல்லிசைக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கலைநிகழ்ச்சிகளுக்கான வேடமணிந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த நாடக, நாட்டுப்புறக் கலைஞா்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதன் விவரம்: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, நாட்டுப்புறக் கலைஞா்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனா். பெரும்பாலான கலைஞா்களின் வாழ்க்கையை கரோனா பொதுமுடக்கம் நிலைகுலையச் செய்துவிட்டது. பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாகின. இச்சூழலில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது நாட்டுப்புறக் கலைஞா்களையும், அவா்களது குடும்பத்தினரையும் மிகவும் பாதித்துள்ளது. ஆகவே, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தளா்வு அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, மேடை மெல்லிசைக் கலைஞா்கள் சங்கத்தினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், தற்போது தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் கோயில் திருவிழா, திருமணம் போன்ற விசேஷங்களில் நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை தான் திருவிழா, சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது எங்களது தொழிலை வெகுவாகப் பாதிக்கும். ஆகவே, நிபந்தனைகளின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கருணை அடிப்படையில் போதிய நிவாரண உதவி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com