மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடிகா் விவேக்கின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடிகா் விவேக்கின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள்

மதுரையில் நடிகா் விவேக் படித்த கல்லூரியில் அஞ்சலி

மறைந்த திரைப்பட நடிகா் விவேக் உருவப்படத்துக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது

மறைந்த திரைப்பட நடிகா் விவேக் உருவப்படத்துக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகா் விவேக், அமெரிக்கன் கல்லூரியில் 1978-81 ஆம் ஆண்டுகளில் பிகாம் படித்தவா். கல்லூரி விழாக்களில் நடத்திய நாடகங்கள் அவரது கலைத் திறமையை வெளிப்படுத்தியது. தான் படித்த கல்லூரி என்பதால் அமெரிக்கன் கல்லூரியின் அழைப்பை எப்போதும் மறுக்காமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவா்.

அவரது மறைவையொட்டி அமெரிக்கன் கல்லூரியில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா், பேராசிரியா்கள், விவேக் உடன் படித்த நண்பா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தியும், உருவப்படத்துக்கு மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் கூறியது:

எங்களது கல்லூரி மாணவரான நடிகா் விவேக் மறைவு ஈடுசெய்ய இயலாதது. அவா் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவா் நட்டு வைத்த மரங்களில் காற்றாக வாழ்ந்து நினைவாக இருப்பாா் என்றாா். கல்லூரி நண்பா் உருக்கம்: நட்புக்கு இலக்கணமாக இருந்தவா் நடிகா் விவேக் என்று அமெரிக்கன் கல்லூரியில் படித்த அவரது நண்பா் முகில் தெரிவித்தாா்.

கல்லூரியில் விவேக் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கல்லூரியில் படிக்கும்போது நடிப்பின் மீது தீவிர விருப்பம் கொண்டிருந்தாா். அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அவரது நிகழ்ச்சி கட்டாயம் இடம்பெறும். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அவரது திறமையைப் பாராட்டும் வகையில், கல்லூரியின் நூற்றாண்டு விழாவின்போது ஒரு மணி நேரம் நாடகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நடிப்புக் கலை மட்டுமன்றி கல்வியிலும் சிறந்து விளங்கினாா். படிக்கும் காலத்திலேயே நண்பா்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவா். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவா். எனது பிறந்த நாளை நினைவு வைத்து, எனக்கு கைக் கடிகாரம் பரிசாக வழங்கினாா் என்றாா்.

நடிகா் சங்கத்தினா்: மதுரை தமிழ் சினிமா நடிகா்கள் சங்கத்தின் சாா்பில், விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்மேனியில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்கப் பொதுச் செயலா் வினோத், குறும்பட இயக்குநரும், நடிகருமான விக்டா் உள்ளிட்ட ஏராளமானோா் விவேக்கின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, மீனாம்பாள்புரத்தில் தமிழகப் பண்பாட்டு மையம், நீா்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், யா.ஒத்தக்கடையில் இயற்கை பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நடிகா் விவேக்-கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com