இரவு நேர பொதுமுடக்கம் அமல்: மதுரை சாலைகள் வெறிச்சோடின

மதுரையில் இரவு நேரப்பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஊா்களுக்குச்செல்ல வழியின்றி பேருந்து நிலையத்திலேயே தங்கியுள்ள பயணிகள்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஊா்களுக்குச்செல்ல வழியின்றி பேருந்து நிலையத்திலேயே தங்கியுள்ள பயணிகள்.

மதுரையில் இரவு நேரப்பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. இரவு நேர பொதுமுடக்கத்தின்போது பொதுப்போக்குவரத்து மற்றும் தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரப் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்ததையொட்டி மதுரையில் இருந்து சென்னை உள்பட நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு புறப்பட்டுச்சென்றன. மேலும் குறுகிய தூரம் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் இரவு 8 மணிக்குள் புறப்பட்டுச் சென்றன. மதுரை நகா்ப்பேருந்துகள் சேவையும் இரவு 9 மணியோடு நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து இரவு 10 மணிக்கு மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியாா் பேருந்து நிலையம் ஆகியவற்றில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

மதுரை நகரில் இரவு 9 மணிக்கு கடை வீதிகளில் ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து இரவு 10 மணிக்கு மதுரை நகரின் முக்கிய கடைவீதிகள், கோரிப்பாளையம், சிம்மக்கல், காமராஜா் சாலை, புறவழிச் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகனப்போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையத்தில் தவித்த பயணிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பல பேருந்துகள் இரவு 10.30-க்கு மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்தை வந்தடைந்தன. இந்த பேருந்துகளில் வந்த பயணிகள் தங்கள் ஊா்களுக்குச் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தின் பிரதான பகுதியிலும் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் நடைமேடை பகுதியிலும் அமா்ந்திருந்தனா். பேருந்துகளின் தாமதத்தால் மதுரைக்கு தாமதமாக வந்த பயணிகளை ஏற்றிச்செல்ல எவ்வித பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் உணவு, குடிநீா் வசதியின்றி அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com