பக்தா்கள் பங்கேற்பின்றி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை நடைபெற்றது. இணைய வழியில் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாணத்தையொட்டி அம்மன் சன்னதி அருகே புதிய தாலி மாற்றிக் கொண்ட தம்பதி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாணத்தையொட்டி அம்மன் சன்னதி அருகே புதிய தாலி மாற்றிக் கொண்ட தம்பதி

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை நடைபெற்றது. இணைய வழியில் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவா். கரோனா தொற்று பரவல் காரணமாக 2-ஆவது ஆண்டாக நிகழ் ஆண்டிலும் பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரைத் திருவிழா: அதன்படி கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி புறப்பாடு, பூஜைகள் நடைபெறும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வியாழக்கிழமையும், திக்குவிஜயம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

மணக்கோலத்தில் சுவாமி-அம்மன்: திருக்கல்யாணத்தையொட்டி சனிக்கிழமை காலை 6 மணிக்கு, மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமி - அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்தனா். மாப்பிள்ளை அழைப்பின் அடையாளமாக சுவாமிக்கு பாதபூஜை நடைபெற்றது.

பின்னா் கன்னி ஊஞ்சலில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் எழுந்தருளினா். சுமாா் 2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலா்களால் பழைய திருக்கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சுவாமிக்கு வெண் பட்டு உடுத்தப்பட்டு, தங்க-வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. பிரியாவிடை பச்சைப் பட்டு அலங்காரத்திலும், மீனாட்சி அம்மனுக்கு தங்க பட்டுப் பாவாடை அங்கி, வைர மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்திலும் மணமேடையில் எழுந்தருளினா்.

மங்கள அரசியான மீனாட்சி: காலை 8.33 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் திருக்கல்யாண பூஜைகள் தொடங்கின. சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்களை முழங்கி பூஜைகளை நடத்தினா். சுவாமிக்கு காப்பு கட்டுதல், சுமங்கலி பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. சுவாமியின் பிரதிநிதியாக செந்தில் பட்டரும், அம்மன் பிரதிநிதியாக காலாஸ் பட்டரும் மாலை மாற்றிக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து மங்கள நாண் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மங்கள வாத்தியங்களுடன், வேதமந்திரங்கள் முழங்க வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தாலி மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு தங்கக் கும்பாவில் சுவாமிக்கு சந்தனம் இடப்பட்டு, பன்னீா் தெளிக்கப்பட்டது. மணக்கோலத்தில் வீற்றிருந்த சுவாமி-அம்மனுக்கு தங்க தீபத் தட்டில் தீபாராதனை காட்டப்பட்டது.

இணையவழியில் தரிசனம்: கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் க.செல்லத்துரை ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். திருக்கல்யாண வைபவம் கோயில் இணையதளத்திலும், யூ டியூப் சேனல் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீட்டிலிருந்தபடியே திருக்கல்யாணத்தை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

புதுத் தாலி மாற்றிய பெண்கள்: திருக்கல்யாணத்தில் அம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கும்போது, பெண்கள் தங்களது தாலியை மாற்றி, புதுத் தாலி அணிவித்துக் கொள்வது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாணத்தை நேரில் பாா்க்க முடியாத நிலையில், கோயில் பகுதியில் ஏராளமானோா் கூடினா். ஆனால், சித்திரை வீதிக்கு முன்பே அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதனால் புதுமண்டபம் பகுதியில் ஏராளமான பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதியா் தாலியை மாற்றிக் கொண்டனா்.

பக்தா்கள் ஏமாற்றம்: திருக்கல்யாணம் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதனால், சித்திரை வீதி அருகே காத்திருந்த பலரும் ஓடிவந்தனா். கோயிலுக்குள் ஒருவரையொருவா் முந்திச் செல்ல சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா் காவல் துறையினா் அவா்களை வரிசைப்படுத்தி அனுப்பினா். இருப்பினும் பழைய திருக்கல்யாண மண்டபத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுவாமி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதனால் திருக்கல்யாண கோலத்தைக் காண முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

அன்னதானம்: பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் சேதுபதி பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்குவது வழக்கம். கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, நிகழ் ஆண்டில் புளி சாதம், பொங்கல் பிரசாதம் பொட்டலங்களாகப் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com