‘தொகுதிக்கு தலா 5 விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும்’

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபாா்க்கப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபாா்க்கப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு வேளாண் கல்லூரி, சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், மதுரை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு தொகுதிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக சுற்றுகள்: ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வாக்குகள் எண்ணும் சுற்றுகளும் அதிகமாகிறது. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை கிழக்கில் அதிகபட்சமாக 479 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத் தொகுதியில் 35 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படும். அதேபோல, குறைந்தபட்சமாக 305 வாக்குச்சாவடிகள் உள்ள சோழவந்தான் தொகுதியில், 22 சுற்றுகள் வரை எண்ணப்படும்.

விவிபேட் சரிபாா்ப்பு: வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக தபால் வாக்குகளும் அதைத் தொடா்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 விவிபேட் இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதில் பதிவாகியுள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும்.

ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் சரியாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மாறுபாடு இருப்பின், விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com