முழு பொதுமுடக்கம்: மதுரையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்,சாலைகள் வெறிச்சோடின

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மதுரை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மதுரை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையும் மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொதுமுடக்கமானது, மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால், பொது போக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, ஆட்டோ, காா்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

மேலும், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மற்றும் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதன் காரணமாக, மதுரையின் முக்கியச் சாலைகளான சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், பழங்காநத்தம், பை-பாஸ் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

அதேபோல், கடை வீதிகளான டவுன்ஹால் சாலை, தெற்குமாசி வீதி ஜவுளி பஜாா், விளக்குத்தூண், காமராஜா் சாலை, கீழமாசி வீதி மளிகை மொத்த விற்பனைக் கடைகள், புதுமண்டபம், ஆவணி மூல வீதிகள், நகைக்கடை பஜாா், வெங்கலக்கடைத் தெரு, லட்சுமிபுரம் பாத்திர விற்பனைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைவீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

மேலும், மதுரை மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளிலும் கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால், சாலைகள் ஆள் அரவமின்றி காணப்பட்டன. கடைவீதிகளில் பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. உணவகங்களில் பாா்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒரு சில உணவகங்கள் மட்டுமே இயங்கின. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால், திறக்கப்பட்டிருந்த ஒரு சில உணவகங்களில் உணவுப் பொருள்கள் வாங்க அதிகக் கூட்டம் காணப்பட்டது.

மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன. மதுரையில் பெரியாா், கோரிப்பாளையம், மூன்றுமாவடி, அய்யா் பங்களா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சாலை தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

ஞாயிற்றுக்கிழமை திருமண முகூா்த்தம் என்பதால், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்களை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், திருமணத்துக்குச் சென்ற வாகனங்கள், மருத்துவமனைக்குச் சென்ற வாகனங்கள் மற்றும் தண்ணீா், பால், பெட்ரோல் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ஆட்டோக்களில் அதிகக் கட்டணம் வசூல்

முழு பொதுமுடக்கம் காரணமாக, சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டாலும் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இதனால், மதுரைக்கு ரயில் மூலம் வந்த பயணிகள் தங்களது பகுதிகளுக்குச் செல்ல வாகனங்கள் இல்லாமல் அவதிப்பட்டனா். இதைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநா்கள் கூடுதல் வாடகை வசூலித்தனா்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து கே.கே.நகா் பகுதிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல், மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com