புதிய கட்டுப்பாடுகள் அமல்: கோயில், வணிக வளாகம், திரையரங்குகள் மூடல்வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை
By DIN | Published On : 27th April 2021 01:36 AM | Last Updated : 27th April 2021 01:36 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன்பாக நின்று திங்கள்கிழமை தரிசனம் செய்த பக்தா்கள்.
மதுரை: கரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து, மதுரையில் உள்ள கோயில்கள், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.
கரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயிலில் தரிசனத்துக்கும், மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
கோயில்கள் முன்பாக தரிசனம்
தற்போது, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பூஜை நேரம் தவிா்த்து மற்ற நேரங்களில் கோயில்களும் நடை சாத்தப்பட்டன. இதனால், மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களின் வாசல்களில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா். மேலும், பல கோயில்களில் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது. அந்த திருமணங்கள் அனைத்தும் கோயில் வாசலிலேயே நடைபெற்றன.
வைகை ஆற்றில் முடி காணிக்கை
சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின்போது, லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவா். பலரும் வைகை ஆற்றங்கரையில் முடி இறக்கி நோ்த்திக்கடன் செலுத்துவா். நிகழாண்டிலும் ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் அழகா்கோயிலிலேயே நடைபெற்றாலும், பலரும் மதுரை வைகை ஆற்றங்கரையில் திங்கள்கிழமை முடி காணிக்கை செலுத்தினா்.
வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை
பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் வழக்கமாக 5 நேர தொழுகையுடன், இரவு நேர சிறப்புத் தொழுகையும் நடைபெறும். ஆனால், அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்துகின்றனா்.
எம்ஜிஆா் விளையாட்டரங்கம்
அரசின் புதிய உத்தரவின்படி, மதுரை ரேஸ்கோா்ஸில் உள்ள எம்ஜிஆா் விளையாட்டரங்கங்கள் மூடப்பட்டன. இந்த விளையாட்டரங்கில் நீச்சல் குளம் மற்றும் பல்வேறு குழு விளையாட்டுகள், தடகளப் பயிற்சிகள் நடைபெறு வழக்கம். பலரும் நடைப்பயிற்சிக்கும் வருவா்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விளையாட்டரங்கங்கள் மூடப்பட்டதால், விளையாட்டு வீரா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இதேபோல், தனியாா் உடற்பயிற்சிக் கூடங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் போன்றவையும் மூடப்பட்டுள்ளன.
வணிக வளாகம், திரையரங்கம்
மதுரை நகரப் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சனிக்கிழமை வரை காட்சிகள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால், திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, திங்கள்கிழமை அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. சில திரையரங்குகளில் வாசல்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.