தொழிலாளா் நல வாரியத் திட்டங்கள்: பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 27th April 2021 11:39 PM | Last Updated : 27th April 2021 11:39 PM | அ+அ அ- |

தொழிலாளா் நல வாரிய நலத்திட்டங்களுக்கு தகுதியுடையத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை தொழிலாளா் உதவி ஆணையா் ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு புதிய நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வாரியக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெறும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்குதல், உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள் எழுதும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்குப் பயிற்சி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்களுக்கு தொழிலாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளியின் மாத ஊதியம், அடிப்படை ஊதியம், அகவிலைப்படி சோ்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு செயலா் தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தேனாம்பேட்டை சென்னை-6 என்ற முகவரி மற்றும் மின்னஞ்சல் அல்லது 044-24321542 செல்லிடப்பேசி எண் 89397-82783 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.