பொதுமுடக்க விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை: மாநகா் காவல் ஆணையா் எச்சரிக்கை
By DIN | Published On : 27th April 2021 11:40 PM | Last Updated : 27th April 2021 11:40 PM | அ+அ அ- |

மதுரை மாநகரில் பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று இரண்டாவது அலையைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறையினா் விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
57.28 லட்சம் அபராதம்: மதுரை மாநகரில் கடந்த மூன்று வாரங்களில், முகக்கவசம் அணியாமல் சென்ற 28,639 பேரிடம் ரூ.57.28 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 220 போ் மீது வழக்குகள் பதிவு செயயப்பட்டு, தலா 500 வீதம் ரூ.1.10 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மாநகரில் பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 8 முதல் போலீஸாா் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். பொதுமக்கள், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
போலீஸாரின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும் என்றாா்.