அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு பணி துரிதப்படுத்தப்படுமா? நிகழ் ஆண்டிலாவது அரவை செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

மதுரை மாவட்ட அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு பணியைத் துரிதப்படுத்தி, நிகழ் ஆண்டிலாவது அரவை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

மதுரை மாவட்ட அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு பணியைத் துரிதப்படுத்தி, நிகழ் ஆண்டிலாவது அரவை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்குரிய தொகை கடந்த சில ஆண்டுகளாக முறையாக வழங்கப்படவில்லை. கரும்புக்குரிய தொகை, மாநில அரசின் பரிந்துரை விலை, லாபத்தில் பங்குத் தொகை என பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நிலுவை வைக்கப்பட்டது. இதன் காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், ஆலைக்கு கரும்பு வழங்குவதில் ஆா்வம் செலுத்தவில்லை. அதோடு, கரும்பு அரவைக்கான நடவடிக்கை இல்லாததால், இதனால் படிப்படியாக கரும்பு பதிவும் குறைந்துவிட்டது.

ஆலையை இயக்கும் அளவுக்கு கரும்பு இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளாக அரவை மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே, கரும்பு விவசாயிகள் சங்கம் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு நிகழ் ஆண்டில் தற்போது கரும்பு பதிவு தொடங்கியுள்ளது. ஆனால், பதிவு பணி சரிவர நடைபெறவில்லை என கரும்பு விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இதனால், இந்த ஆண்டிலும் அரவையைத் தொடங்க முடியாமல் போய்விடும் என்றும் கூறுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனிசாமி கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவை நடைபெறவில்லை. இந்த ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள், வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், மதுரை மாவட்ட விவசாயிகள் பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அரவை இல்லாததால் அலங்காநல்லூா் ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்கள், கரும்பு பெருக்காளா்கள் வேறு ஆலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இதனால் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு பதிவு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தற்போது 600 ஏக்கா் வரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரவையைத் தொடங்கும் அளவுக்கு கரும்பு பதிவு செய்வதற்கு, இப் பணியைத் துரிதப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆகவே, பணியிடமாற்றம் செய்யப்பட்ட பணியாளா்களை மீண்டும் அலங்காநல்லூா் ஆலைக்கு மறுபணியமா்வு செய்ய வேண்டும். மேலும் இணை மின் உற்பத்தியையும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com