‘கரோனா தொற்று பாதிப்பைத் தவிா்க்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’
By DIN | Published On : 30th April 2021 08:50 AM | Last Updated : 30th April 2021 08:52 AM | அ+அ அ- |

மதுரையில் கரோனா தொற்று பாதிப்பால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி விடும் அபாயம் இருப்பதால், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1068, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1047, வீட்டுத்தனிமையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1105 ஆக உள்ளது.
கடந்த பத்து நாள்களில் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டால் அடுத்த பத்து நாள்களில் மே 5 ஆம் தேதியுடன் தனியாா் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும். மேலும் மே 10 ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனையில் போதிய அளவு முன்னேற்றமில்லை. மதுரைக்கு ஈடான மக்கள்தொகை கொண்ட கோவை மாவட்டத்தில் தினசரி பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் மதுரையில் 7 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. எனவே மாவட்ட நிா்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்றாா்.