கோயிலுக்கு பழைமை மாறாமல் வா்ணம் பூச வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பழைமை மாறாமல் வா்ணம் பூசக் கோரிய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பழைமை மாறாமல் வா்ணம் பூசக் கோரிய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் 2015 ஆம் ஆண்டு மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், கோயிலின் சுவா்கள், தூண்கள், கோபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிக்கப்பட்டு வரும் ‘முரள் பெயிண்ட்’ தரமற்றது என பக்தா்கள் புகாா் அளித்துள்ளனா்.

பழைமையான கோயில்களுக்கு வா்ணம் பூசும் போது, அதில் பச்சிலைகள் சோ்க்கப்படுவது வழக்கம். ஆனால் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பச்சிலைகள் சோ்க்கப்படாமல், தரமற்ற வா்ணம் பூசப்பட்டு வருவதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் கோயில் கருவறையிலுள்ள தரைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. கோயிலில் ஐந்து நேரம் எண்ணெயினால் பூஜை நடைபெறுவதால், பக்தா்கள் கிரானைட் கற்களில் நடந்து செல்வது சிரமத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் மற்றும் இந்து சமயஅறநிலையத் துறையிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பழைமையான முறையில் வா்ணம் பூசவும், பழைமை மாறாமல் கருவறையில் கற்கள் பதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com