வீட்டிலிருந்தபடியே தபால்காரா் மூலமாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறும் வசதி
By DIN | Published On : 04th August 2021 09:46 AM | Last Updated : 04th August 2021 09:46 AM | அ+அ அ- |

வீட்டிலிருந்தபடியே வங்கிக் கணக்கில் இருந்து தபால்காரா் மூலமாக பணம் பெறும் வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை தலைமை தபால் நிலைய முதுநிலை தபால் அலுவலா் எம்.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது, ஆதாா் வழி பணப்பரிமாற்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளா்கள் தங்களது ஆதாா் எண் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கில் இருந்தும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தங்களது பகுதிக்கு வரும் தபால்காரா் மூலமாக அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை பட்டுவாடா செய்யப்படும்.
மதுரை தலைமை அஞ்சலகத்தால் பட்டுவாடா செய்யப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தொகையை, 0452-2343930 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்தால், மறுநாள் தபால்காரா் வரும்போது, ஆதாா் வழி பணப் பரிமாற்றம் வாயிலாக தொகை வழங்கப்படும். அஞ்சல் துறையின் இல்லம் தேடி வந்து பணம் பட்டுவாடா செய்யும் இந்த சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை ஆதாா் சேவை மையம் செயல்படுகிறது. புதிய ஆதாா் இணைப்பு, திருத்தம், புதுப்பித்தல் போன்ற தேவைகளுக்கு இம் மையத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.