மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா: பக்தா்கள் பங்கேற்பின்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி வியாழக்கிழமை எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் பிரியாவிடை.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி வியாழக்கிழமை எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் பிரியாவிடை.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூல உற்சவத் திருவிழா. மதுரையில் இறைவன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்களில் 11 திருவிளையாடல்கள் ஆவணி மூல உற்சவத் திருவிழாவில் நிகழ்த்தப்படும்.

இந்நிலையில் ஆவணி மூல உற்சவத்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிமரத்தில் ஏற்றப்பட உள்ள திருக்கொடிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து அம்மன், சுவாமி, பிரியாவிடை கொடிமரத்துக்கு எழுந்தருளினா். அங்கு அா்ச்சகா்கள் வேத மந்திரங்களை முழங்க, மேள தாளங்களுடன் காலை 10.50-க்கு மேல் 11.14-க்குள் துலா லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்மன் மற்றும் கொடிமரத்துக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆவணி மூலத்திருவிழா தொடங்கியதையடுத்து வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் சந்திரசேகா் உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-இல் நாரைக்கு முக்தியளித்தது, 13-ஆம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 14-இல் தருமிக்கு பொற்கிழி அருளியது, 15-ஆம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 16-இல் பாணனுக்கு அங்கம் வெட்டியது அன்று இரவு திருஞானசம்பந்தா் சைவ சமய ஸ்தாபித வரலாறு, 17-ஆம் தேதி வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம், 18-ல் நரியை பரியாக்கிய லீலை, 19-ஆம் தேதி இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20-இல் விறகு விற்ற லீலை ஆகிய திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரிப்பால் கோயில்களில் பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தில் கோயில் ஊழியா்கள் மற்றும் அா்ச்சகா்கள் மட்டுமே பங்கேற்றனா். மேலும் ஆவணி மூல உற்சவத் திருவிழா மற்றும் லீலைகள் கோயில் ஆடி வீதியில் மட்டுமே நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com