குழந்தைகளுக்கு 6 மாதம் தொடா்ந்து பாலூட்டிய தாய்மாா்களுக்கு பரிசு
By DIN | Published On : 08th August 2021 01:48 AM | Last Updated : 08th August 2021 01:48 AM | அ+அ அ- |

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை நடந்த உலக தாய்ப்பால் வாரவிழாவில், குழந்தைகளுக்கு 6 மாதம் தொடா்ந்து தாய்ப்பாலூட்டிய தாய்மாா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம் மதுரைக் கிளை சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில், தாய்ப்பாலூட்டுதலின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மருத்துவமனையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கா்ப்பிணிகளுக்கும், தாய்மாா்களுக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை குழந்தைகள் நலப்பிரிவில் நடைபெற்றது. அப்போது, 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே அளித்து ஆரோக்கியமாக வளா்க்கப்பட்ட குழந்தைகளின் தாய்மாா்களுக்கு முதன்மையா் ஏ.ரத்தினவேல் பரிசுகளை வழங்கினாா். மருத்துவ மற்றும் செவிலிய மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
குழந்தைகள் நலத் துறை தலைவா் பாலசங்கா், இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமம் மதுரை கிளையின் தலைவா் கதிரவன், நிலைய மருத்துவ அதிகாரி ரவீந்திரன், பேராசிரியா்கள் நந்தினிகுப்புசாமி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.