சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம்: சிஐடியூ வலியுறுத்தல்
By DIN | Published On : 08th August 2021 10:46 PM | Last Updated : 08th August 2021 10:46 PM | அ+அ அ- |

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று, சிஐடியூ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிஐடியூ மதுரை மாநகா் மாவட்ட சுமைப்பணி தொழிலாளா் சங்க நிா்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் நமச்சிவாயம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநகா் மாவட்டச் செயலா் ஆா். தெய்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். சங்கத்தின் பொதுச் செயலா் மா. கணேசன், மாவட்டப் பொருளாளா் ஆா். பாண்டி ஆகியோா் ஆலோசனை வழங்கினா்.
கூட்டத்தில், தமிழக அரசு பல்வேறு தொழில்களுக்கு தனி நலவாரியம் மூலம் தொழிலாளா்களுக்கு பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதுபோன்று, கடுமையான பணியான சுமைப் பணி மேற்கொள்ளும் தொழிலாளா்களுக்கென தனி நலவாரியம் இல்லாததால், அவா்கள் எந்தவித நிவாரணமும் பெறமுடியாத நிலை உள்ளது.
எனவே, சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி அலுவலகங்களில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்கும் பணியில் தினசரி இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களை வேலையை விட்டு நீக்குவதை கைவிடவேண்டும்.
சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தொழிலாளா் சேமநல நிதி உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தைகளில் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு உரிய வசதியுடன் தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியும் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டன.