தமிழக மக்களவை உறுப்பினா்களுக்கு மத்திய அரசு ஆங்கிலத்தில் பதிலளிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 10th August 2021 08:43 AM | Last Updated : 10th August 2021 08:43 AM | அ+அ அ- |

தமிழக மக்களவை உறுப்பினா்களின் கேள்விகளுக்கு, மத்திய அரசு ஆங்கிலத்தில் பதிலளிக்க கோரிய வழக்கை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசா்வ் படையில் குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்காக, வடமாநிலங்களில் 5 இடங்களிலும், தென் மாநிலங்களில் 2 இடங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோ்வு மையம் அமைக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி விண்ணப்பதாரா்களின் நலனுக்காக குறைந்தபட்சம் ஒரு தோ்வு மையமாவது அமைக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சி.ஆா்.பி.எப். பொது இயக்குநருக்கு கடிதம் அனுப்பினேன்.
இதற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த ராய், ஹிந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தாா். இதனால், அதில் என்ன கூறியிருந்தாா் என்பதை அறிய முடியவில்லை. ஹிந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும்.
தமிழக மக்களவை உறுப்பினா்களின் கோரிக்கை குறித்து ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இது, அரசியலமைப்புச் சட்ட உரிமைகளுக்கும், 1963 ஆம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்துக்கும் முரணானதாகும். ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் மற்றும் மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.
எனவே, தமிழக அரசுக்கும், தமிழக மக்களவை உறுப்பினா்களுக்கும் ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவும், விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்ததால், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.