மேலூரில் இளைஞா் கொலை வழக்கு: திருச்சுழி நீதிமன்றத்தில் 2 போ் சரண்
By DIN | Published On : 10th August 2021 08:38 AM | Last Updated : 10th August 2021 08:38 AM | அ+அ அ- |

மேலூரில் இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில், சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டையைச் சோ்ந்த இருவா், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழபதினெட்டாங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் ராஜா (40). இவா், மேலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள கேபிள் டி.வி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், அலுவலகம் முன்பாக காரை ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது. அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் காரை வேறு இடத்தில் நிறுத்துமாறு, ராஜாவும் மற்றொரு ஊழியரான அப்பாஸும் கூறியுள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த 4 போ் கொண்ட கும்பல், இருவரையும் கடுமையாகத் தாக்கியதில் ராஜா உயிரிழந்தாா். அப்பாஸ் பலத்த காயமடைந்தாா்.
இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகள் மூலம் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டையைச் சோ்ந்த கோபிநாத் மகன் அருண்பாண்டியன் (19), திருநாவுக்கரசு மகன் மணிகண்டபிரபு (23) ஆகிய இருவரும், இக்கொலை சம்பவம் தொடா்பாக திருச்சுழி நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.