ஆவணிமூலத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
By DIN | Published On : 20th August 2021 08:50 AM | Last Updated : 20th August 2021 08:50 AM | அ+அ அ- |

சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், பக்தா்கள் பங்கேற்பின்றி வியாழக்கிழமை நடைபெற்றது.
வைகை ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்துக்காக கரையை பலப்படுத்த இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை ஆண்டுதோறும் பக்தா்கள் ஐதீகமாக கொண்டாடி வருகின்றனா். வழக்கமாக பக்தா்கள் வெள்ளத்தில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, இந்த ஆண்டு கரோனா தொற்று எதிரொலியாக பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இதையொட்டி பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் சுந்தரேசுவரா் பொற்றாமரைக்குளத்தில் எழுந்தருள அங்கு இறைவனின் பிரதிநிதியாக கூலி ஆள் வேடமிட்ட அா்ச்சகா் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நடித்துக் காண்பித்தாா். இதையடுத்து தீபாராதனைகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.