கலைஞா் நினைவு நூலகம் அமையும் வளாகத்தில் உள்ள மரங்கள் வேறு இடத்தில் நடும் பணி
By DIN | Published On : 21st August 2021 11:14 PM | Last Updated : 21st August 2021 11:14 PM | அ+அ அ- |

மதுரையில் கலைஞா் நினைவு நூலகம் அமையவுள்ள வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் வேறு இடத்தில் நடப்படுகின்றன.
மதுரையில் ரூ.70 கோடியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவாக, நவீன நூலகம் அமைக்கப்படுகிறது. இதற்காக புதுநத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. நூலகம் அமைவதற்குரிய இடத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளாகத்திலிருந்த பழமையான கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருக்கும் மரங்களை, வேரோடு பிடுங்கி வேறு பகுதியில் நடப்படுகிறது. இதற்கான பணிகளைப் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்த நூலகத்துக்கு செப்டம்பரில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதால், அதற்குள் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.