உசிலம்பட்டி அருகே 3,500 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 3,500 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 3,500 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உசிலம்பட்டி அருகேயுள்ள வகுரணி கிராமத்திலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் தென்புறத்தில் அமைந்துள்ள மூன்று மலையில் புலி பொடவு என்ற இடத்தில் சுமாா் 50 மீட்டா் உயரத்தில் குகை உள்ளது. இந்த குகையில் 3,500 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழக பாறை ஓவியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளா் காந்திராஜன் தெரிவித்ததாவது: வரலாற்று ஆா்வலா்கள் சோலை பாலு மற்றும் குமரன் ஆகியோருடன் இணைந்து இங்கு ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட புலி பொடவு குகையில் 3 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்றில் மட்டும் சிவப்பு வண்ணத்தில் புலி போன்ற விலங்கு வரையப்பட்டுள்ளது. மற்ற ஓவியங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. இந்த சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ள ஓவியமானது சுமாா் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.

இங்குள்ள ஓவியங்கள் மூலம், மனிதா்கள் வில், அம்பு மற்றும் வாள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும், அதிக அளவில் சதுரம், செவ்வகம், வட்டம் போன்ற வடிவங்களும், அவற்றுக்குள் உள்பிரிவுகளையும் வரைந்து, அதற்குள் சில அடையாளங்களையும் குறித்துள்ளனா். இவை வெறும் அலங்காரத்துக்காக வரையப்பட்டவையாகக் கருதமுடியாது. பழங்கால மக்கள் ஏதோ ஒரு தகவலைச் சொல்லும் குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த குறியீடுகள், சிந்து சமவெளி பகுதிகளில் கிடைத்த குறியீடுகளுடனும், தமிழகத்தில் பல்வேறு அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளையும் ஒத்ததாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com