மதுரைக் கல்லூரியில் மரங்கள் அறியும் பயணம்
By DIN | Published On : 22nd August 2021 11:18 PM | Last Updated : 22nd August 2021 11:18 PM | அ+அ அ- |

மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற மரங்கள் அறியும் பயணத்தில் பங்கேற்றவா்கள்.
மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில், மதுரைக் கல்லூரியில் மரங்கள் அறியும் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் மதுரை கிரீன் அமைப்பு சாா்பில், 89-ஆவது மாத மரங்கள் அறியும் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில், மதுரைக் கல்லூரி தாவரவியல் பேராசிரியா் மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினாா்.
தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள யூகலிப்டஸ் மரம் மற்றும் நூறாண்டுகளுக்கு மேலாக உள்ள நாவல் மரம், நாட்டு வாகை, இலுப்பை, மகிழம் உள்ளிட்ட மரங்களை பாா்வையிட்டனா். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள 90 வகையான நாட்டு மரங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும், அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியா் ஸ்டீபன் எடுத்துரைத்தாா்.
இதையடுத்து, கல்லூரியில் மியாவாக்கி முறையில் உருவாக்கப்பட்டுள்ள குறுங்காட்டையும் பாா்வையிட்டனா். பின்னா், மரங்கள் அறியும் பயணத்தின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து மதுரை கிரீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் என்.சிதம்பரம் எடுத்துரைத்தாா்.
இதில், கல்லூரிப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், மாணவா்கள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.