மதுரை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை
By DIN | Published On : 22nd August 2021 11:21 PM | Last Updated : 22nd August 2021 11:21 PM | அ+அ அ- |

மதுரை அருகே அரசுப்பேருந்தில் பணியிலிருந்த நடத்துனா் சனிக்கிழமை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம் மேலூா் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செல்லச்சாமி (45). இவா் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தாா். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகரப் பேருந்தில் செல்லச்சாமி சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, திருப்புவனம் பஜாா் பகுதியில் பேருந்தில் ஏறிய சிலா், அவரை கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவரை, ஓட்டுநா் மற்றும் பேருந்தில் இருந்தவா்கள் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே செல்லச்சாமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாக உறவினா்கள் செல்லச்சாமியை கட்டையால் தாக்கியது தெரியவந்துள்ளது.